பாகிஸ்தான் வீரர் முகமது ஆமிர் தடையை மீறி கிரிக்கட் போட்டியில் பங்கேற்றது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.இது பற்றி ஐ.சி.சி. விசாரணை நடத்தி வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், இவரது தடைக் காலம் அதிகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த இளம் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஆமிர் (19). கடந்த ஆண்டு லார்ட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆமிர், சல்மான் பட், முகமது ஆசிப் ஆகிய 3 பாகிஸ்தான் வீரர்கள் ஆட்டம் நிர்ணயம் எனப்படும் கிரிக்கட் சூதாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆமிர், சூதாட்ட புக்கிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு வேண்டுமென்றே "நோ பால்" வீசினார். இவர்கள் மூவருக்கும் சர்வதேச கிரிக்கட் வாரியம் (ஐ.சி.சி.) 5 ஆண்டுகள் தடை விதித்தது. இந்தக் காலக் கட்டத்தில் எந்த ஒரு போட்டியிலும் பங்கேற்கக் கூடாது.
இந்தச் சூழலில் இங்கிலாந்தின் சர்ரே கிரிக்கட் லீக் டிவிஷன் போட்டியில், அடிங்டன் அணிக்காக முகமது ஆமிர் விளையாடியது அம்பலமாகியுள்ளது. செயின்ட் லூக் அணிக்கு எதிராக துவக்க வீரராக களமிறங்கி 60 ரன்கள் எடுத்தார். பின் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி, வெற்றி நாயகனாக ஜொலித்தார். இது தொடர்பான செய்தியை லண்டனில் இருந்து வெளியாகும் "டெய்லி மெயில்" பத்திரிக்கை வெளியிட, ஆமிர் வசமாக சிக்கிக் கொண்டார்.
இது குறித்து ஐ.சி.சி. செய்தி தொடர்பாளர் கோலின் கிப்சன் கூறுகையில், ஐ.சி.சி. தடை என்பது உலகம் முழுவதும் நடக்கும் அனைத்து விதமான கிரிக்கட் போட்டிகளுக்கும் பொருந்தும். ஆமிர் விவகாரம் பற்றி விசாரித்து வருகிறோம். இச்சம்பவம் உண்மையானால், அது ஐ.சி.சி.யின் தடையை மீறிய செயலாகும் என்றார்.
இங்கிலாந்து கிரிக்கட் வாரியம் (இ.சி.பி.) செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், இந்த விவகாரம் பற்றி தெரியும். எங்களது கட்டுப்பாட்டின் கீழ் சம்பந்தப்பட்ட போட்டி வருகிறதா என ஐ.சி.சி.யுடன் சேர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.
இப்பிரச்னையில் ஆமிர் எதையும் மூடி மறைக்கவில்லை. நட்பு போட்டி என நினைத்து விளையாடியதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இது குறித்து இவர் கூறுகையில், போட்டி துவங்குவதற்கு முன் குழு நிர்வாகிகளிடம் பேசினேன். தனியாருக்கு சொந்தமான மைதானத்தில் நடக்கும் நட்பு ரீதியான போட்டி என்பதால், ஐ.சி.சி. தடையை மீறிய செயலாகாது என்று கூறினர். இங்கிலாந்து கிரிக்கட் வாரியத்தின் கட்டுப்பாட்டுக்குள் வராது என்றும் உறுதி அளித்தனர். தடையை மீறி விளையாட நான் ஒன்றும் முட்டாள் அல்ல என்றார்.
அடிங்டன் அணியின் கப்டன் இஜாஸ் கூறுகையில், எங்களது அணிக்கு ஒரு வீரர் குறைவாக இருந்தார். உடனே நண்பர் ஒருவரிடம் கேட்டேன். அவர் தான் ஆமிர் பெயரை சொன்னார். லீக் அமைப்பாளர்களிடம் விசாரித்த போது, பிரச்சினை எதுவும் இல்லை என்றனர். கிராம அளவிலான எங்களது அணி வீரர்களின் சொந்த முதலீட்டில் இயங்குகிறது. அதிகாரப்பூர்வ நடுவர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. வீரர்களே நடுவர் பணியை செய்வர். எனவே ஆமிர் தடையை மீறியதாக நினைக்கவில்லை. அவருக்கு நாங்கள் சம்பளம் எதுவும் வழங்கவில்லை. ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை. போட்டி முழுவதும் அவர் இருக்கவில்லை. நாங்கள் கொடுத்த உறுதியின் அடிப்படையில் தான் விளையாடினார். தவறு ஏற்பட்டிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
பாகிஸ்தான் கிரிக்கட் வாரியம் (பி.சி.பி.) தலைவர் இஜாஸ் பட் கூறுகையில், இவ்விடயத்தில் ஐ.சி.சி. கேட்டுக் கொண்டால் மட்டுமே தலையிடுவோம் என்றார்.
ஆமிர் இரண்டாவது முறையாக தடையை மீறியுள்ளார். ஏற்கனவே தற்காலிக தடை விதிக்கப்பட்ட காலத்தில் ராவல்பிண்டியின் ஒரு குழு அணிக்காக விளையாடினார். இது பற்றி ஐ.சி.சி. மற்றும் பி.சி.பி. விசாரித்தது. அந்த குழு, ராவல்பிண்டி கிரிக்கட் சங்கத்துடன் பதிவு செய்யப்படாதது மற்றும் அதிகாரப்பூர்வமற்ற போட்டி என்பதால் தப்பினார். தற்போது மீண்டும் சிக்கி இருப்பதால் ஐ.சி.சி. பிடியில் இருந்து ஆமிர் தப்புவது கடினம்.
News: Lankasri


0 comments:
Post a Comment