உலகக்கோப்பை கிரிக்கட்டில் அரை இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து அப்ரிதி ஒருநாள் போட்டிக்கான கப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.பாகிஸ்தான் கிரிக்கட் வாரியம் அவர் மீது இந்த நடவடிக்கை எடுத்தது. பாகிஸ்தானின் சிறந்த "ஆல்ரவுண்டர்" ஆட்டக்காரரான அப்ரிதி இதனால் அதிருப்தி அடைந்தார். இந்த நிலையில் சர்வதேச கிரிக்கட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அப்ரிதி திடீரென அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, கிரிக்கட் ரசிகர்களும், பாகிஸ்தான் மக்களும் என் மீது மிகுந்த மரியாதையும், அன்பும் வைத்துள்ளனர். அதை கெடுக்கும் வகையில் பாகிஸ்தான் கிரிக்கட் வாரியம் நடந்து கொண்டுள்ளது. வீரர்களுக்கு எந்த வகையில் மரியாதை கொடுக்க வேண்டும் என்று அவர்களுக்கு தெரியவில்லை. அவர்களுடன் தொடர்ந்து பணியாற்றுவதன் மூலம் ரசிகர்களின் மரியாதையும், அன்பையும் கெடுத்துக் கொள்ள நான் விரும்பவில்லை. எனவே சர்வதேச கிரிக்கட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன்.
பாகிஸ்தான் கிரிக்கட் வாரியத் தலைவராக இஜாஸ் பட் இருக்கும் வரை நான் எனது முடிவை மாற்றிக்கொள்ள மாட்டேன். தற்போது இருக்கும் கிரிக்கட் வாரிய நிர்வாகம் மக்களின் விருப்பத்துக்கு மாறாக செயல்படுகிறது. நான் மீண்டும் சொல்கிறேன் தற்போதைய கிரிக்கட் வாரிய நிர்வாகம் நீடிக்கும் வரையில் சர்வதேச கிரிக்கட்டில் விளையாட மாட்டேன். இவர்கள் இல்லாதபட்சத்தில் மக்கள் நான் விளையாட வேண்டும் என்று விரும்பினால் எனது முடிவை மறுபரிசீலனை செய்து மீண்டும் விளையாட வருவேன்.
இதே சமயம் உள்நாட்டு போட்டி மற்றும் லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன். சர்வதேச போட்டியில் மட்டும் ஆட மாட்டேன். என்னை ஏன் கப்டன் பதவியில் இருந்து நீக்கினார்கள் என்பது தெரியவில்லை. நான் அணிக்காக கடினமாக உழைத்தேன். சிதறிக்கிடந்த அணியை ஒன்று சேர்த்து பலமான அணியாக உருவாக்கினேன்.
உலகக்கோப்பை கிரிக்கட் அரை இறுதிப்போட்டி வரை சிறப்பாக விளையாடினேன். ஆனால் அரை இறுதியில் தோற்றதற்காக என்னிடம் விளக்கம் கேட்காமலேயே கப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டார்கள் என்று அப்ரிதி தெரிவித்தார்.
News:Lankasri



































