அமித் மிஸ்ராவின் அசத்தலான "ஹாட்ரிக்" கைகொடுக்க பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல். லீக் போட்டியில் 82 ரன்கள் வித்தியாசத்தில் டெக்கன் அணி அபார வெற்றி பெற்றது.பந்துவீச்சு, களத்தடுப்பு, துடுப்பாட்டம் என கிரிக்கட்டின் அனைத்து பிரிவிலும் சொதப்பிய பஞ்சாப் அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது. நான்காவது ஐ.பி.எல். தொடரின் முக்கிய லீக் போட்டியில் கில்கிறைஸ்ட்டின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், காமிரான் ஒயிட்டை கப்டனாக கொண்ட டெக்கன் சார்ஜர்ஸ் அணியை சந்தித்தது.
தர்மசாலாவில் நடந்த இப்போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில் "டொஸ்" வென்ற கில்கிறைஸ்ட், களத்தடுப்பு செய்வது என தவறான முடிவு எடுத்தார்.
டெக்கன் அணிக்கு சிகர் தவான், ரவி தேஜா இணைந்து துவக்கம் கொடுத்தனர். முதலில் சற்று "அடக்கி வாசித்த" சிகர் தவான், போகப் போக அதிரடிக்கு மாறினார். பார்கவ் பட், பிரவீண் குமார் ஓவர்களில் தலா 2 பவுண்டரி விளாசிய இவர், ஹாரிசின் ஓவரிலும் பவுண்டரிகள் அடித்து அசத்தினார்.
மறுமுனையில் ரவி தேஜாவும் தன்பங்கிற்கு பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பினார். இவர் பியுஸ் சாவ்லாவின் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்கள் அடித்து அரைசதம் கடந்தார். இவர்களது அதிரடி காரணமாக, ஸ்கோர் மின்னல் வேகத்தில் உயர்ந்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 131 ரன்கள் சேர்த்த நிலையில், 41 பந்துகளில் 60 ரன்கள் எடுத்த ரவி தேஜா, வல்தாட்டியிடம் வீழ்ந்தார்.
பின் சிகர் தவானுடன் டுமினி இணைந்தார். தொடர்ந்து பவுண்டரி மழை பொழிந்த சிகர் தவான், அரைசதம் கடந்தார். டுமினி 12 ரன்களுடன் திரும்பினார். டெக்கன் சார்ஜர்ஸ் அணி 20 ஓவரில், 2 விக்கெட்டுக்கு 198 ரன்கள் குவித்தது. 14 பவுண்டரி, ஒரு சிக்சர் உட்பட 95 ரன்கள் எடுத்த சிகர் தவான், காமிரான் ஒயிட் (15) அவுட்டாகாமல் இருந்தனர்.
கடின இலக்கை விரட்டிய பஞ்சாப் அணிக்கு, வல்தாட்டி (5) மீண்டும் சோகமான துவக்கம் கொடுத்தார். அணியை மீட்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட மார்ஷ் (13), 3 பவுண்டரியுடன் திருப்தியடைந்து திரும்பினார். அடுத்தடுத்து விக்கெட் சரிந்த போதும், கப்டன் கில்கிறைஸ்ட் கடந்த போட்டியைப் போல மீண்டும் அதிரடிக்கு திரும்பினார். ஆனந்த், பிரக்யான் ஓஜா ஓவர்களில். தலா ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்து மிரட்டினார். 37 பந்துகளில் அரைசதம் அடித்த கில்கிறிஸ்ட் (51), கிறிஸ்டியன் பந்தில் சிக்கினார். இதே ஓவரின் கடைசி பந்தில் தினேஷ் கார்த்திக்கும் (11) அவுட்டாக, பஞ்சாப் அணியின் தோல்வி உறுதியானது. அபிஷேக் நாயர் (3) நிலைக்கவில்லை.
பின் போட்டியில் 16 ஓவரை வீசிய அமித் மிஸ்ரா, சுழலில் மிரட்டினார். இந்த ஓவரின் 3 வது பந்தில் மெக்லாரெனை (7) அவுட்டாக்கிய இவர் அடுத்த பந்தில் மன்தீப் சிங்கையும் (7) வெளியேற்றினார். தொடர்ந்து மிரட்டிய இவர் ஐந்தாவது பந்தில் ஹாரிசை "டக்" அவுட்டாக்கி இந்த ஐ.பி.எல். தொடரின் முதல் "ஹாட்ரிக்" விக்கெட் வீழ்த்தி அசத்தினார். பியுஸ் சாவ்லா (13) அவுட்டாகாமல் இருந்தார். பஞ்சாப் அணி 19 ஓவரில் 116 ரன்னுக்கு சுருண்டு, 82 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. சுழலில் அசத்திய அமித் மிஸ்ரா 4, கிறிஸ்டியன் 2 விக்கெட் வீழ்த்தினர்.
கட்டாயம் வெற்றி பெற வேண்டிய போட்டியில், பஞ்சாப் அணி அடைந்த தோல்விக்கு மோசமான களத்தடுப்பு தான் முக்கிய காரணம். டெக்கன் அணியின் ரவி தேஜாவுக்கு மட்டும் 0, 24, 37, 58 ரன்கள் எடுத்திருந்த போது நான்கு முறை "கேட்ச்" வாய்ப்புகளை கோட்டை விட்டனர். தவிர காமிரான் ஓயிட் கொடுத்த வாய்ப்பையும் நழுவவிட்டனர்.
லீக் சுற்று போட்டிகள் இன்று முடியும் நிலையில், "பிளே ஆப்" எனப்படும் அடுத்த சுற்றில் பங்கேற்கும் நான்கு அணிகள் யார், யார் என்பது முடிவாகியுள்ளது. தற்போதைய நிலையில் சென்னை, பெங்களூரு, கோல்கட்டா, மும்பை அணிகள் முதல் நான்கு இடங்களில் உள்ளன. இன்றைய போட்டிகளின் முடிவைப் பொறுத்து, இந்த வரிசையில் மட்டும் மாற்றம் ஏற்படும்.அமித் மிஸ்ரா அசத்தல் நேற்று பஞ்சாப் அணிக்கு எதிராக "ஹாட்ரிக்" விக்கெட் வீழ்த்திய அமித் மிஸ்ரா, இரண்டாவது முறையாக இச்சாதனை செய்துள்ளார். இதற்கு முன் 2008 தொடரில், டெல்லி அணிக்காக, தற்போதைய தனது டெக்கன் அணிக்கு எதிராக "ஹாட்ரிக்" விக்கெட் கைப்பற்றினார். இதேபோல பஞ்சாப் அணிக்காக யுவராஜ் சிங், 2009 தொடரில் இரு முறை (பெங்களூரு, டெக்கன்) இந்த சாதனை ஏற்படுத்தினார். தவிர, 2008 ல் பாலாஜி, நிடினி, ரோகித் சர்மா (2009), பிரவீண் குமாரும் (2010), ஐ.பி.எல். தொடரில் "ஹாட்ரிக்" சாதனை படைத்துள்ளனர்.
News:Lankasri


0 comments:
Post a Comment