இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
முதலில் ஆடிய புணே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய கொல்கத்தா 16.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
முன்னதாக பூவா தலையா வென்ற கொல்கத்தா அணி களத்தடுப்பை தேர்வு செய்தது. கொல்கத்தா அணி வழக்கத்துக்கு மாறாக 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது. கம்பீரின் இந்த முயற்சிக்கு நல்ல பலனும் கிடைத்தது. புணே அணியில் தொடக்க ஆட்டக்காரர் ரைடர் 1 ரன்னில் வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மணீஷ் பாண்டே, பெர்குசன் ஆகியோர் தலா 16 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
பின்னர் வந்த கங்குலி சற்று ஆக்ரோஷமாகவே ஆடினார். இக்பாலின் பந்துவீச்சில் ஸ்ட்ரெய்ட் திசையில் சிக்ஸர் ஒன்றையும் விளாசினார். ஆனாலும் அவர் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 18 ரன்களில் பதானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதன்பிறகு வந்தவர்களில் யுவராஜ் 24 ரன்கள் எடுத்தார். கடைசிக் கட்டத்தில் ராணா 18 ரன்கள் எடுக்க அந்த அணி 118 ரன்கள் சேர்த்தது.
கொல்கத்தா தரப்பில் பதான், அல்ஹசன், பாலாஜி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
கம்பீர் அரைசதம்: பின்னர் ஆடிய கொல்கத்தா அணியில் கோஸ்வாமி 6 ரன்களில் வெளியேறியபோதும், கேப்டன் கம்பீர் பொறுப்பை உணர்ந்து ஆடினார். திவாரி 24 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து வெளியேறினார். பந்துவீச்சில் அசத்திய பதான் துடுப்பாட்டத்திலும் அதிரடியாக ஆடினார்.
வெற்றிக்கு இரண்டு ரன்கள் தேவைப்பட்டபோது அவர் ஆட்டமிழந்தார். 25 பந்துகளைச் சந்தித்த பதான் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் எடுத்தார். 16.4 ஓவர்களில் அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. கேப்டன் கம்பீர் 46 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.
பதான் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
News:Lankasri


0 comments:
Post a Comment