ஐ.பி.எல். தொடரில் இன்று நடக்கவுள்ள லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் றோயல்ஸ் அணிகள் மோதுகின்றன. நான்காவது ஐ.பி.எல். "டுவென்டி 20" கிரிக்கட் தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று நடக்கவுள்ள லீக் போட்டியில் சச்சின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, ராஜஸ்தான் றோயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.  மும்பை அணி, இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் 8 ல் வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டது. பஞ்சாப் அணியின் எழுச்சி காரணமாக மீதமுள்ள இரண்டு போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால் இன்று கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தும் என நம்பலாம். தொடர் வெற்றிகளை கொடுத்து வந்த மும்பை இந்தியன்ஸ் அணி, கடைசியாக பங்கேற்ற டெக்கன் சார்ஜர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இன்று சச்சின், பிலிஜார்டு, அம்பதி ராயுடு, ரோகித் சர்மா உள்ளிட்டோர் துடுப்பாட்டத்தில் அசத்தும் பட்சத்தில் வெற்றியை வசப்படுத்தலாம். வேகப்பந்துவீச்சில் போலார்டு, குல்கர்னி உள்ளிட்டோர் கைகொடுக்க வேண்டும். ஹர்பஜன் சுழலில் அசத்தி வருவது அணியின் பலமாக உள்ளது. இன்று கடைசி போட்டியில் பங்கேற்கும் ராஜஸ்தான் அணி, இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் 5 ல் மட்டுமே வெற்றி கண்டு, அடுத்த சுற்று வாய்ப்பினை இழந்துள்ளது. இன்று மும்பைக்கு எதிராக திராவிட், பசல், வாட்சன் உள்ளிட்ட "டாப் ஆர்டர்" வீரர்கள் பொறுப்புடன் செயல்பட்டால் ஆறுதல் வெற்றியுடன் ஐ.பி.எல். தொடரை நிறைவு செய்யலாம். ராஜஸ்தான் அணியில் திறமையான பந்துவீச்சாளர்கள் இருந்த போதிலும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. வேகப்பந்துவீச்சில் திரிவேதி, வாட்சன், டெய்ட் ஓரளவு நம்பிக்கை அளிக்கிறார். சுழலில் கப்டன் ஷேன் வார்ன் இருப்பது பலம். இவர் அதிக விக்கெட் வீழ்த்துவதில் கவனம் செலுத்தினால் நல்லது. இவருக்கு ஜோகன் போத்தா, அசோக் மேனரியா உள்ளிட்டோர் ஒத்துழைப்பு அளிக்கும் பட்சத்தில் எதிரணியின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போடலாம். நான்காவது ஐ.பி.எல். தொடரின் லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியிடம், மும்பை பரிதாபமான தோல்வி அடைந்தது. இதற்கு சொந்த மண்ணில் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.பி.எல். அரங்கில் மும்பை, ராஜஸ்தான் அணிகள் இதுவரை ஆறு போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா 3 போட்டிகளில் வெற்றி பெற்று சம பலத்தில் உள்ளன.
|
0 comments:
Post a Comment