உலகக் கோப்பை கிரிக்கட் போட்டியின் போது இலங்கை வீரர் உபுல் தரங்கா ஊக்கமருந்து எடுத்துக் கொண்டது தெரியவந்துள்ளது.இதுதொடர்பாக சர்வதேச கிரிக்கட் கவுன்சில்(ஐ.சி.சி) விரைவில் விசாரணையைத் தொடங்கவுள்ளது. சமீபத்தில் முடிவடைந்த உலகக் கோப்பையில் இலங்கை அணியில் விளையாடிய உபுல் தரங்கா தடை செய்யப்பட்ட பிரெட்னிசோலான் என்ற மருந்தை உட்கொண்டது சோதனையில் தெரியவந்துள்ளது என சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதியில் தரங்கா சதமடித்தது குறிப்பிடத்தக்கது. ஐ.சி.சி விசாரணையின் போது தரங்காவுக்கு உதவுவதற்காக வழக்கறிஞர்களும் தயாராக உள்ளனர்.
இதுகுறித்து தரங்கா கூறுகையில்,"எனக்கு இந்த மருந்தை பரிந்துரைத்தவர் மிகச்சிறந்த மருத்துவர். அவரிடம் தான் இந்தியாவின் சச்சின், கெளதம் கம்பீர், ஆசிஷ் நெஹ்ரா ஆகியோர் சிகிச்சை பெறுகின்றனர். அவ்வாறு இருக்கையில் அவர் எனக்கு பரிந்துரைத்த மருந்தில் தடை செய்யப்பட்டது பொருள் இருப்பது நிச்சயம் அவருக்குத் தெரிந்திருக்கும்" என்றார்.
தரங்கா விவகாரம் தொடர்பாக இலங்கை கிரிக்கட் வாரியத்தின் செயலாளர் நிஷந்தா ரணதுங்காவிடம் கேட்ட போது அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். அதிகாரப்பூர்வமாக தரங்காவின் விவகாரம் தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. இதுதொடர்பாக எந்தவிதமான புகாரோ, அறிக்கையோ இலங்கை கிரிக்கட் வாரியத்துக்கு வரவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஐ.சி.சி செய்தித்தொடர்பாளர் ஜேம்ஸ் பிட்ஸ்ஜெரால்டும் பதிலளிக்க மறுத்துவிட்டார். பிரெட்னிசோலான் மருந்து ஒவ்வாமை சார்ந்த நோய்கள், எதிர்ப்பு சக்தி, ஆஸ்துமா நோய்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. தரங்கா ஆஸ்மாவால் பாதிக்கப்பட்டவர்.
மூட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் கடந்த சில நாள்களாக பயிற்சியில் ஈடுபடவில்லை. மேலும் இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி போட்டியிலும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
News:Lankasri


0 comments:
Post a Comment