இந்தியாவுக்காக நிறைய சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து விளையாட வேண்டும் என இளம் வீரர் விராத் கோஹ்லி விருப்பம் தெரிவித்துள்ளார்.வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்யவுள்ள இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் சச்சின், டோனி, சேவாக், ஜாகிர் உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இளம் வீரர்களுடன் காம்பிர் தலைமையில் களமிறங்க உள்ள இந்திய அணி மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து இளம் வீரர் விராத் கோஹ்லி கூறியதாவது, உடற்தகுதி குறித்து எவ்வித பிரச்சினையும் எனக்கு இல்லை. எனவே இந்தியாவுக்காக நிறைய சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்க விரும்புகிறேன். மூத்த வீரர்கள் தொடர்ந்து நிறைய போட்டிகளில் பங்கேற்று வருவதால், ஓய்வு எடுத்துக் கொண்டனர். ஆனால் எனக்கு ஓய்வு என்ற எண்ணம் தோன்றவே இல்லை.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். இத்தொடர் என்னைப் போன்ற இளம் வீரர்களுக்கு மிக முக்கியமான ஒன்று. மூத்த வீரர்கள் இல்லாத நிலையில், இளம் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் சாதிக்கும் பட்சத்தில், வரும் காலங்களில் இந்திய அணியில் நிலையான இடத்தை தக்க வைத்துக் கொள்ளலாம். சமீபத்தில் உலகக்கோப்பை வென்றுள்ளதால், இந்திய அணி மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் எங்களுக்கு சிறிது நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் நெருக்கடிகளை கடந்து கரீபிய மண்ணில் முழுத்திறமையை வெளிப்படுத்தி சாதிக்க முயற்சிப்போம்.
நான்காவது ஐ.பி.எல். தொடரில் எங்கள் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி சிறப்பாக செயல்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னை அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் எங்கள் அணி துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டதால், சுலப வெற்றி பெற முடிந்தது. கிறிஸ் கெய்ல் வருகை எங்கள் அணியின் துடுப்பாட்டம் பலத்தை அதிகரித்துள்ளது. இவர் தனது திறமையை தக்க வைத்துக் கொள்ளும் பட்சத்தில், கோப்பை வென்று சாதிக்க வாய்ப்பு உள்ளது.
எங்கள் அணியின் பந்துவீச்சு, களத்தடுப்பில் நல்ல முன்னேற்றம் கண்டிருப்பது வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இன்று நடக்கவுள்ள "பிளே ஆப்" சுற்றில் மீண்டும் சென்னை அணியை சந்திக்க இருப்பதால், மிகுந்த கவனமுடன் விளையாட வேண்டும். ஏனெனில் லீக் சுற்றில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க முயற்சிப்பார்கள் என்பதால் போட்டியில் நிச்சயம் நெருக்கடி இருக்கத்தான் செய்யும் என்று விராத் கோஹ்லி தெரிவித்தார்.
News:Lankasri


0 comments:
Post a Comment