பாகிஸ்தான் கிரிக்கட் சபையுடன் முரண்பட்டுக் கொண்டிருக்கும் பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் முன்னாள் கப்டன் அப்ரிடிக்கு இலங்கைக் கிரிக்கட் சபையிடமிருந்து மகிழ்ச்சியான செய்தி ஒன்று கிடைத்துள்ளது.இலங்கை பிரீமியர் லீக்கில் விளையாட அப்ரிடி பாகிஸ்தான் கிரிக்கட் சபையிடமிருந்து ஆட்சேபணையற்ற சான்றிதழ் பெறத் தேவையில்லை என இலங்கை பிரிமியர் லீக் ஏற்பாட்டாளர்கள் அப்ரிடியிடம் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் கிரிக்கட் சபை அப்ரிடிக்கு ஆட்சேப
ணையற்ற சான்றிதழ் தர மறுத்தாலும் அப்ரிடி இலங்கை பிரிமியர் லீக்கில் விளையாட முடியும் என போட்டி ஏற்பாட்டாளர்கள் அப்ரிடியிடம் தெரிவித்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பாகிஸ்தான் கிரிக்கட் சபைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக சர்வதேச கிரிக்கட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அப்ரிடி அறிவித்ததைத் தொடர்ந்து, அந்நாட்டுக் கிரிக்கட் சபை அப்ரிடிக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவது தெரிந்ததே.
அத்துடன் அப்ரிடி பிராந்தியங்களுக்கிடையேயான போட்டிகளில் விளையாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடையால் இங்கிலாந்து ஹாம்ஷயர் அணிக்காக விளையாட முடியாமல் போயுள்ளது.
இதன் காரணமாக ஜூலை - ஆகஸ்ட் மாதமளவில் நடைபெறவுள்ள இலங்கை பிரீமியர் லீக்கில் அப்ரிடி விளையாடுவது சந்தேகத்திற்கிடமானது. இப்போட்டித் தொடரில் ஒரு அணிக்குத் தலைமை வகிக்கவும் அப்ரிடி ஒப்புக்கொண்டிருந்தார். இந்நிலையிலேயே ஏற்பாட்டுக்குழுவின் இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.
அப்ரிடியைத் தவிர பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் தற்போதைய கப்டன் மிஸ்பா - உல் - ஹக், ஓய்வு பெற்ற வேகப்பந்து வீச்சாளர் சொஹைப் அக்தர், அப்துல் ரசாக், உமர் குல் மற்றும் உமர் அக்மல் ஆகிய பாகிஸ்தான் வீரர்களும் இப்போட்டித்தொடரில் விளையாடவுள்ளனர்.
18 நாட்களுக்கு நடைபெறவுள்ள இலங்கை பிரீமியர் லீக்கில் பிராந்தியங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 7 அணிகள் விளையாடவுள்ளன. பாகிஸ்தான் வீரர்கள் மட்டுமன்றி மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல், கெய்ரோன் போலார்ட், நியூசிலாந்து அணியின் டானியல் விட்டோரி, தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஹேர்ஷல் கிப்ஸ் மற்றும் அயர்லாந்தின் கெவின் ஓ பிரயன் ஆகியோரும் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


0 comments:
Post a Comment